தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, தவெக அரசின் ஆளுநர் உரையை பிரபல சினிமா இயக்குநர் அட்லீயின் படங்களோடு ஒப்பிட்டு திமுக எம்எல்ஏ சிவசங்கரன் விமர்சித்த சம்பவம் அவையில் பெரும் பரபரப்பையும் சிரிப்பலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் இன்று பேசிய திமுகவின் சிவசங்கரன், “தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு மிகவும் நெருக்கமான இயக்குநரான அட்லீ, பல பழைய திரைப்படங்களின் காட்சிகளை வெட்டி, ஒட்டி ஒரு புதிய படத்தை உருவாக்குவார்; அதேபோலத்தான் திமுக அரசின் முந்தைய சாதனைகளை எல்லாம் வெட்டி, ஒட்டி இந்த தவெக அரசு தங்களது ஆளுநர் உரையைத் தயாரித்துள்ளது” என காரசாரமாகச் சாடினார்.
திமுக எம்எல்ஏ-வின் இந்த அட்லீ பாணி சினிமா விமர்சனத்திற்குத் தவெக தரப்பில் இருந்து உடனே அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து அதிரடியாகப் பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், “இது போன்ற தேவையற்ற சினிமா ஒப்பிடுகளையும், வெறும் வார்த்தை விளையாட்டுகளையும் சட்டமன்றத்தில் பேசுவதை விட்டுவிட்டு, மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான அரசியலை அவையில் பேசுங்கள்” என திமுகவினருக்குக் கிரிஸ்ப்பாக அறிவுறுத்தினார். சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக மற்றும் தவெக இடையே சினிமா பாணியில் வெடித்த இந்த காரசார விவாதம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாகவும், செய்திகளாகவும் தீயாய் பரவி வருகிறது.
