சென்னை மதுரவாயல் பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் பணிபுரியும் பெண்ணை ஏமாற்றி, ‘ஜிபே’ மூலம் ரூ.14 ஆயிரம் பறித்த வாலிபர் ஒருவர் போலீசால் கைது செய்யப்பட்டார்.

அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சாந்தி (31), மதுரவாயலில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, ஆட்டோவில் வந்த வாலிபர் ஒருவர், “ஆட்டோ கட்டணம் ரூ.300 செலுத்த வேண்டும். கையில் பணம் இல்லை. நீங்கள் கொடுத்தால், ஜிபே மூலம் அனுப்பிவிடுகிறேன்” என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு சாந்தி சம்மதம் தெரிவித்தார். பரிவர்த்தனை உறுதிப்படுத்த ஒரு ரூபாய் அனுப்புமாறு கூறிய வாலிபரின் கணக்கிற்கு சாந்தி ஒரு ரூபாய் அனுப்பினார். அதற்குப் பிறகு அவசரமாக பேச வேண்டுமென்று சொல்லி சாந்தியின் செல்போனை வாங்கி பேசுவது போல நடித்தார். பின்னர், அவசரமாக வந்த அதே ஆட்டோவில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

சில நிமிடங்கள் கழித்து சாந்தி செல்போனைச் சரிபார்த்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து வேறு ஒரு கணக்கிற்கு ஜிபே மூலம் ரூ.14,000 பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனே மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வளசரவாக்கம்–ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்த பரத் (27) என்பவரை கைது செய்தனர். ஒரு ரூபாய் பரிவர்த்தனையின் மூலம் சாந்தியின் யுபிஐ (UPI) ரகசிய விவரங்களை அறிந்த பரத், பின்னர் அவளது செல்போனைப் பயன்படுத்தி பணத்தை மாற்றியதாக விசாரணையில் தெரியவந்தது.

கைதான பரத்திடம் இருந்து ரூ.9,000 பணமும், சம்பவத்தில் பயன்படுத்திய ஆட்டோவும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதற்கு உதவியதாகக் கூறப்படும் அவரது நண்பரைத் தேடி வருகின்றனர்.