கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் இத்திட்டத்தின் விரிவாக்கத்தைத் துவக்கி வைத்தார். இந்த விரிவாக்கத்தின் மூலம், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சுமார் பதினேழு லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்திருக்கும் அனைத்து பெண்களுக்கும், இனி வழக்கம் போல் ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் ரூபாய் ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்குவதன் மூலம், அவர்களது வாழ்க்கைத் தரம் உயரும், மேலும் குடும்பச் செலவுகளுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதால், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெண்கள் மத்தியில் இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.