பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் டைரக்டர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் படம் “ஜவான்”. இப்படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, வில்லனாக விஜய் சேதுபதி, யோகிபாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் உட்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. கௌரவ வேடத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் போன்றோர் நடித்து உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரிகான் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டெர்டெயிண் மெண்ட் தயாரித்து வருகிறது.

வருகிற ஜூன் 2ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வி.எஃப்.எக்ஸ் பணிகள் காரணமாக படத்தின் வெளியிட்டு தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் கசிந்து உள்ளது. 4 வருடங்களுக்கு பின் வெளியாகிய ஷாருக்கானின் “பதான்” படம் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்து உள்ளது.

இதன் காரணமாக அவசரக் கதியில் ஜவான் படத்தை முடித்து வெளியிட நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் அட்லீ விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஜூன் மாதம் கடைசி வாரத்தில் ஜவான் படம் வெளியாகலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 11ம் தேதி பரிசீலிக்கப்பட்டு பிறகு ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் கசிந்து இருக்கிறது. ஜவான் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.