பிரதமர் மோடிக்கு வசதியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு திமுக மாணவரணி கண்டனம் தெரிவித்துள்ளது.

543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்.எஸ் சாந்து உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தனர்.

அதன்படி லோக்சபா தேர்தல் 2024 ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும்,  ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதோடு விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டம், ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம் கட்டம், மே 7-ம் தேதி மூன்றாம் கட்டம், மே 13-ம் தேதி நான்காம் கட்டம், மே 20-ம் தேதி ஐந்தாம் கட்டம், மே 25-ம் தேதி ஆறாம் கட்டம், ஜூன் 1-ம் தேதி ஏழாவது கட்டம் என தேர்தல் ஆணையர் ராஜீவ் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தம் 96.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வசதியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்து இருக்கிறது அதனால் தான் முதற் கட்டம் தேர்தல் நடைபெற போகிற தமிழ்நாட்டில் பல்லடம், மதுரை, சென்னை, கன்னியாகுமரி, கோவை என தன் கட்சி பிரச்சார கூட்டங்களை முன்னரை நடத்தி உள்ளார்! இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை” என தெரிவித்துள்ளார்..

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் :

வேட்புமனு தாக்கல் துவக்கம் – மார்ச் 20

வேட்புமனு தாக்கல் கடைசி நாள் – மார்ச் 27

வேட்புமனு பரிசீலனை – மார்ச் 28

திரும்ப பெற கடைசி நாள் – மார்ச் 30

வாக்குப்பதிவு – ஏப்ரல் 19

வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4