இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது. படப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படக்குழு தணிக்கை சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தது.

ஆனால், தணிக்கை வாரியம் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கச் சொன்னதோடு, படத்தை மறு ஆய்வுக் குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்கு தொடர்ந்தது. விசாரணையின் போது, தணிக்கை வாரியம் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக படக்குழு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த தணிக்கை வாரியம், கடைசி நேரத்தில் விண்ணப்பித்துவிட்டு உடனே சான்றிதழ் கேட்பது சாத்தியமில்லை என வாதிட்டது. இதைக் கேட்ட நீதிபதி, படத்தை ஏன் மறு ஆய்வுக் குழுவிற்கு அனுப்பினீர்கள் என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.

இதற்கிடையே, உள்நோக்கத்துடன் சான்றிதழ் மறுக்கப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.