உத்தரப் பிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் கார்கானா காவல் நிலையப் பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்ய முயன்ற ஒரு சிறுமியை, அங்கிருந்த சிலரின் வீரமான செயல் காப்பாற்றியுள்ளது. இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தக் காணொளியில், சுமார் 14 வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுமி, பாலத்தின் கீழ் உள்ள ஒரு தூணில் அமர்ந்து ஆற்றில் குதிக்கத் தயாராக இருப்பதைப் பார்க்கலாம்.

அப்போது, அருகிலுள்ள பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சில காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் அங்கு கூடினர். அனைவரும் சிறுமியைத் தற்கொலை முயற்சியில் இருந்து தடுக்கப் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுமி யாருடைய பேச்சையும் கேட்காமல், ஆற்றில் குதிக்கும் முடிவில் இருந்தாள். நிலைமையைப் புரிந்துகொண்ட ஒரு இளைஞன், சிறிதும் தாமதிக்காமல் தூண் மீது துணிச்சலாகக் குதித்தார். எதிர்பாராத இந்தச் செயலால் அதிர்ச்சி அடைந்த சிறுமி ஆற்றில் குதிப்பதற்காகத் தாவி விட்டாள்.

ஆனால், அந்த ஒரு வினாடியில் அந்த இளைஞன் சிறுமியைப் பிடித்துக் கொண்டு, தன் உயிரையும் பணயம் வைத்து அவளைத் தூணில் நிலை நிறுத்தினார். அதன் பிறகு, மற்ற காவலர்களும் பொதுமக்களும் வந்து சிறுமியைப் பாதுகாப்பாக மேலே இழுத்து அவளது உயிரைக் காப்பாற்றினர். அந்த இளைஞன் ஒரு வினாடி தாமதித்திருந்தாலும், சிறுமி ஆற்றில் விழுந்திருக்கக்கூடும் என்பதால், அவரது துணிச்சலான செயல் பலராலும் பாராட்டப்படுகிறது.