இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியலின் மிக உயரிய பண்பாளருமான ஐயா நல்லகண்ணு (101), சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணு, நேற்று பிற்பகல் 1.55 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக மக்கள் பணியாற்றிய அவரது மறைவுச் செய்தி, தமிழக அரசியல் களத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லகண்ணுவின் மறைவு செய்தி அறிந்தவுடன், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர், அவரது குடும்பத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியதாவது, “ஐயா நல்லகண்ணு நம்மிடம் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காகத் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர். ஏழை, எளிய மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட ஒரு தலைசிறந்த மனிதர்.
மேலும் அரசியலில் எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும், இன்றுவரை தனக்கென ஒரு சொந்த வீடு கூட வைத்துக்கொள்ளாத அரிய தலைவரைத் தமிழகம் பெற்றிருந்தது. இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு மிகப்பெரிய முன்மாதிரி. அவரது சேவையைப் பாராட்டும் வகையில், நல்லகண்ணு அவர்களுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க மத்திய அரசிடம் முறைப்படி பரிந்துரைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
