சென்னையில் வசதியான குடும்பப் பெண்களைத் திட்டமிட்டுத் தன்வசப்படுத்தி, நகை மற்றும் பணத்தைப் பறித்ததோடு, ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய தாய் மற்றும் அவரது இரு மகன்களின் மோசடி அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக தாய் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சங்கீதா (54) மற்றும் அவரது மகன்கள் திலீப் (33), அங்கித் (31) ஆகியோர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாடகைக்குக் குடியேறுவார்கள். அந்தப் பகுதியில் வசிக்கும் அழகான மற்றும் வசதியான பெண்களைக் கண்டறிந்து, அவர்களிடம் முதலில் தாய் சங்கீதா மிகவும் அன்பாகவும், பாசமாகவும் பழகி நெருக்கமாவார்.
பாச வலையில் அந்தப் பெண் சிக்கியவுடன், தனது மகனைப் பழக விடுவார். அதன்பின்னர் மகன் மூலமாகக் காதல் வலையை வீசி, ஆபாசப் படங்கள் எடுத்து பெண்களைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வருவது இவர்களது வழக்கமாக இருந்துள்ளது.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தபோது, அங்குள்ள தொழிலதிபர் ஒருவரின் மனைவியைக் குறிவைத்துள்ளனர். வழக்கம்போல் தாய் பாசத்தைக் காட்ட, மூத்த மகன் திலீப் அந்தப் பெண்ணைக் காதல் வலையில் விழ வைத்துள்ளார்.
தங்களுக்கு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் சிக்கல் இருப்பதாகவும், கோடிக்கணக்கான பணம் முடக்கப்பட்டுள்ளதாகவும் நாடகமாடி, அந்தப் பெண்ணிடமிருந்து, 1 கிலோ தங்க நகைகள், வைர நகைகள், 2.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் ரூ. 20,000 ரொக்கம் ஆகியவற்றைத் தந்திரமாகப் பறித்துள்ளனர்.
மேற்கொண்டு பணம் தர அந்தப் பெண் மறுத்தபோது, தனது மகனுடன் அவர் நெருக்கமாக இருந்த ஆபாசப் படங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் தாய் சங்கீதா மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் தனது கணவரிடம் உண்மையைச் கூறி கதறி அழுதுள்ளார்.
இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் மோசடியில் ஈடுபட்ட சங்கீதா மற்றும் அவரது இளைய மகன் அங்கித் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான திலீப், கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் மத்தியப் பிரதேச மாநிலத்திற்குத் தப்பி ஓடிவிட்டார். அவரைப் பிடிப்பதற்கும், நகைகளை மீட்பதற்கும் போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்
