மத்தியப் பிரதேசம், சாகர் மாவட்டத்தின் குராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திகார் கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோகர் லோதி (42), அவரது தாயார் பூல்ராணி (70), மகள் ஷிவானி (18) மற்றும் மகன் அனிகேத் (16) ஆகிய நால்வரும் தங்களது வீட்டில் தண்ணீரில் கலந்த சல்பாஸ் மாத்திரைகளை குடித்து தற்கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடமிருந்து ஒரு விரிவான தற்கொலைக் குறிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

தற்கொலைக்கான முக்கிய காரணமாக சொத்து பிரிவினை மற்றும் குடும்பச் சண்டை கூறப்பட்டுள்ளது. மனோகர் லோதியின் மனைவி திரௌபதி லோதி, சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், சம்பவத்துக்கு முந்தைய இரவு கணவன்-மனைவிக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மனோகரும், அவரது தாயும், மகளும், மகனும் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் பூல்ராணியும் அனிகேத் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஷிவானி குராய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மனோகர் சாகர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் இருந்து போலீசார் கைப்பற்றிய தற்கொலைக் குறிப்பில், சொத்து பிரிவினை, பண்ணையில் உள்ள 3 எருமைகள் யாருக்கு வழங்கப்பட வேண்டும், நகைகள் எப்படிப் பிரிக்கப்பட வேண்டும், கோத்ரெஜ் அலமாரியில் உள்ள ரூ.1.20 லட்சம் எந்த சடங்குகளுக்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் “எங்களுக்கு தற்கொலைக்கும் யாருக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை” எனவும் தற்கொலைக்குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. இது குடும்பத்தினர் கடந்த சில வாரங்களாக மன அழுத்தத்தில் இருந்ததை வெளிப்படுத்துகிறது.

இந்த சம்பவம் நடைபெற்ற இரவில், மேலடிக்கையில் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்ட மனோகரின் சகோதரர் ஜெகதீஷ் லோதி மாடிக்கு சென்று பார்வையிட்டபோது நால்வரும்  உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக உறவினர்கள் மற்றும் கிராம மக்களை அழைத்து, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உயிர்கள் காப்பாற்றப்படவில்லை.

தகவல் கிடைத்தவுடன் எஸ்.டி.எம் மனோஜ் சௌராசியா, எஸ்.டி.ஓ.பி சச்சின் பார்டே மற்றும் காவல் நிலைய பொறுப்பாளர் யோகேந்திர சிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தற்கொலைக் குறிப்பு சட்டபூர்வமாக கைப்பற்றப்பட்டு, அதன் உரை, கையெழுத்து மற்றும் சூழ்நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது. இந்த குடும்ப தற்கொலை சம்பவம் திகார் கிராமம் முழுவதையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.