திருவனந்தபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய மாணவி ஒருவர் திருச்சூர் சட்டக்கல்லூரியில் பயின்று வருகிறார். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சொந்த ஊருக்குச் செல்லும் பழக்கத்திற்கு ஏற்ப, கடந்த வெள்ளிக்கிழமை சொர்ணூர்-திருவனந்தபுரம் வேநாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் திரும்பிக் கொண்டிருந்தார். ரெயில் இரவு 9 மணிக்கு வர்க்கலா அருகே வந்தபோது, மாணவியின் அருகில் இருந்த ஒருவர் அவரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்
பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்ததையடுத்து, போலீசார் அதே வண்டியில் இருந்த அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருவனந்தபுரம் வட்டியூர்க்காவை சேர்ந்த சதீஷ் (41) என்பதும், கேரள உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர் என்பதும் தெரியவந்தது. மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சதீஷ் மீது திருவனந்தபுரம் தம்பானூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். உயர்நீதிமன்ற ஊழியர் ஒருவர் ஈடுபட்ட இந்த வன்கொடுமை சம்பவம், கேரளா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டக்கல்லூரி மாணவிகளும், பெண் பயணிகளும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது குறித்து பல தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது.
