மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில், சொத்துப் பிரச்சினை காரணமாகத் தன் அண்ணனையும் அண்ணியையும் தம்பி ஒருவரே கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாப்லு சௌத்ரி என்பவர், பல ஆண்டுகளாக மூத்த அண்ணன் சஞ்சய் சௌத்ரியுடன் பூர்வீகச் சொத்துக்காகச் சண்டையிட்டு வந்துள்ளார். சமீபத்தில், பாய் தூஜ் பண்டிகையின் போதும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் சமாதானமாகியுள்ளனர். ஆனால், வெள்ளிக்கிழமை அன்று சஞ்சய் சொத்தைப் பிரிப்பதற்காகச் சுவர் எழுப்ப முடிவு செய்ததால், மீண்டும் தகராறு வெடித்தது. ஆத்திரமடைந்த பாப்லு, முதலில் வீட்டுக்குள் இருந்த அண்ணி பபிதா சௌத்ரியைக் கத்தியால் குத்தினார்.

அண்ணி தாக்கப்படுவதைக் கண்ட அண்ணன் சஞ்சய் தடுக்க வந்தபோது, பாப்லு அவரைக் கத்தியுடன் நடுவீதி வரை துரத்திச் சென்று சரமாரியாகக் குத்தினார். பட்டப்பகலில், பொதுமக்கள் அதிர்ச்சியில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இந்தக் கொடூரத் தாக்குதல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் அண்ணனும் அண்ணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கமாபூர் காவல் நிலைய போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளியான பாப்லு சௌத்ரியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.