ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள தானி தேதர்பாத் கிராமத்தில், நிலத் தகராறு காரணமாக ஒரு நபர் தனது ஒன்றரை வயது பேத்தியையே ஓடும் ஜேசிபி (JCB) இயந்திரத்தின் முன்னால் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கிராமத்தில் இரு தரப்பினரிடையே நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாகப் பகை இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜேசிபி இயந்திரம் வந்தபோது தகராறு முற்றியது. அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த நபர், ஜேசிபி இயந்திரத்தைத் தடுப்பதற்காகத் தனது சொந்தப் பேத்தியை அதன் சக்கரங்களுக்கு முன்னால் தூக்கி எறிந்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக ஜேசிபி ஓட்டுநர் சரியான நேரத்தில் இயந்திரத்தை நிறுத்தியதால் அந்தப் பிஞ்சு உயிர் நூலிழையில் உயிர் தப்பியது. மனிதாபிமானமே இல்லாமல் ஒரு பச்சிளம் குழந்தையைத் தாத்தாவே கொலை செய்ய முயன்ற இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அந்த நபரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
