உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில், 18 வயது இளைஞர் ஒருவரை மற்றொரு இளைஞர் தண்ணீருக்குள் மூழ்கடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் சிசிடிவி  கேமரா பதிவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது  சலார்பூர் கலான் கிராமத்தில் திங்கள்கிழமை மதியம் இக்கொடூரம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த இளைஞர் சொஹைல் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தனக்குத் தெரிந்த மற்றொரு இளைஞருடன் திங்கள்கிழமை மதியம் 1 மணியளவில் குளிப்பதற்காக அந்த நீச்சல் குளத்திற்குச் சென்றுள்ளார். நீச்சல் குளத்தில் பலர் குளித்துக்கொண்டிருந்த போதே, அந்த மர்ம நபர் சொஹைலின் தலையை வலுக்கட்டாயமாகப் பிடித்து சுமார் இரண்டு நிமிடங்கள் தண்ணீருக்கு அடியில் அமுக்கியுள்ளார். அப்போது சொஹைல் மூச்சு விட முடியாமல் தண்ணீருக்குள் கைகளை அசைத்துத் தீவிரமாகப் போராடியும், அந்த நபர் அவரை விடாமல் தண்ணீருக்குள்ளேயே அழுத்திப் பிடித்துள்ளார்.

 

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த நபர் கையை எடுத்தவுடன், சொஹைல் தண்ணீரின் மேல்மட்டத்திற்கு வந்து நீந்த முயன்றுள்ளார். ஆனால், அடுத்த சில நொடிகளில் மூச்சுத் திணறி தண்ணீருக்குள் மூழ்கி, குளத்தின் அடிப்பகுதிக்குச் சென்றுவிட்டார். பின்னர் அங்கு குளித்துக்கொண்டிருந்த வேறொரு நபரின் காலில் சடலம் தட்டுப்பட்ட பிறகே, சொஹைல் உயிரிழந்தது தெரியவந்தது.

சொஹைலுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால், அவரது மரணத்தில் சந்தேகமடைந்த குடும்பத்தினர் நீச்சல் குளத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் அவர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சொஹைலுடன் சைக்கிளில் வந்த அந்த மர்ம நபர் தற்பொழுது தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நகசா காவல் துறையினர், கொலையாளியைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.