மத்திய அரசு அதிகாரி (IRS) ஒருவரின் 22 வயது மகள் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராகுல் மீனா என்ற வாலிபர், இச்சம்பவம் நடப்பதற்கு வெறும் 8 மணி நேரத்திற்கு முன்பு ராஜஸ்தானிலும் ஒரு கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் மீனா, கடந்த 21-ஆம் தேதி இரவு தனது நண்பருடன் சேர்ந்து திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். பின்னர் அவரிடமே பைக்கை வாங்கிக்கொண்டு, நள்ளிரவில் நண்பர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். கணவர் தான் திரும்பி வந்துவிட்டார் என நினைத்து கதவைத் திறந்த நண்பரின் மனைவியை, ராகுல் மீனா கட்டாயப்படுத்தி வேறு அறைக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பெண்ணின் எதிர்ப்பையும் மீறி கொடூரமாகத் தாக்கியதில் அந்தப் பெண் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, ராகுல் மீனா அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மயக்கம் தெளிந்து தனது கணவருக்குத் தகவல் தெரிவிக்க, உடனடியாக ராஜஸ்தான் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், ராஜஸ்தானில் இருந்து டெல்லிக்குச் செல்லும் கார் ஒன்றிற்கு ரூ. 6,000 தருவதாகக் கூறி ஏறிய ராகுல் மீனா, டெல்லியை அடைந்ததும் கார் ஓட்டுநரையும் மிரட்டிவிட்டுப் பணத்தைத் தராமல் தப்பியோடியுள்ளார்.
டெல்லிக்கு வந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ஐ.ஆர்.எஸ் அதிகாரியின் மகளைக் கொடூரமாகக் கற்பழித்துக் கொலை செய்த வழக்கில் டெல்லி போலீசாரால் அவர் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டார். தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜஸ்தான் போலீசாரும் ராகுல் மீனா மீது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேநேரம், லூடோ விளையாட்டில் ஏற்பட்ட பணப் பகையின் காரணமாகவே தன் மகன் மீது பொய் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக ராகுலின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் உண்மைத்தன்மையைக் கண்டறிய போலீசார் அவரது தொலைபேசி அழைப்புகள் மற்றும் குற்றப் பின்னணிகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
