சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் இரும்பு ஆலை  சாலையில் இருக்கிறது சர்க்கார் கொல்லப்பட்டி. இந்த பகுதியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் செங்கனூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் இயங்கி வருகிறது. இந்த இடத்தில் நாட்டு வெடி, அதாவது திருவிழாவிற்கு வெடிக்க கூடிய நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முறையான வரிப்பணம் பெற்றதாக கூறப்பட்டிருந்தாலும் கூட, இதுகுறித்து விசாரணை ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இந்த குடோனில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டுள்ளனர். இன்று மாலை 4:30 மணியளவில் இந்த குடோனில் திடீரென ஒரு வெடி சத்தம் ஏற்பட்டுள்ளது. பயங்கர வெடி சத்தம் கேட்டு சிதறியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது முற்றிலுமாக இந்த குடோன் தரைமட்டமாகி புகைமூட்டமாக  உள்ளது.. பின்னர் உடனடியாக தீயணைப்பு துறை, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  மீட்பு குழுவினர் விரைந்து வந்து பார்த்தபோது இங்கு பணியாற்றியவர்களில் 3 பேர், அதாவது கிடங்கின் உரிமையாளர் சதீஷ்குமார், இங்கே பணியாற்றிய நடேசன் மற்றும் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் என 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும்  80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேர் மற்றும் 4 பேர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நடந்த இடத்தைப் பொறுத்தவரை செங்கனூர் பகுதியில் குடியிருப்புகள் இல்லாத ஒரு வயல்வெளியில் ஒதுக்கப்புறமான இடத்தில் தான் இந்த கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கு 2 ஆண்டுகள் செயல்பட்டுவதாக கூறப்படுகிறது வெப்பத்தின் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து சேலம் மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர் என அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.