கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்வராயபுரம் குறிஞ்சி நகரில் சஞ்சய்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூரில் இருக்கும் கல்லூரியில் பி.காம் சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சஞ்சய்க்கும் அதே கல்லூரியில் படிக்கும் செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணி(20) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இரண்டு ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

இதுகுறித்து அறிந்த ரமணியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 8- ஆம் தேதி காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் போலீசார் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ரமணியின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் சஞ்சயின் பெற்றோருடன் புதுமணத் தம்பதியினரை போலீசார் அனுப்பி வைத்தனர். கடந்த 24-ஆம் தேதி இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கிடையே ரமணியின் தந்தை எனது மகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உனது பொருள் வீட்டில் இருக்கிறது. வந்து எடுத்து செல் என தெரிவித்தார். பிறகு வந்து அதனை எடுத்துக் கொள்கிறேன் என ரமணி கூறியதாக தெரிகிறது.

இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தொலை தொடர்பு கல்வி மூலம் படிக்க முடிவு செய்து கடந்த 29-ஆம் தேதி விண்ணப்பங்கள் வாங்குவதற்காக இருவரும் கோவைக்கு வந்துவிட்டு பிற்பகலில் வீடு திரும்பினர். அப்போது சோர்வாக இருப்பதாக கூறி தூங்க சென்ற ரமணி நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ரமணியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர் ரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ரமணியின் உறவினர்கள் அவரது கையில், கழுத்தில் காயங்கள் இருப்பதாகவும், சாவில் மர்மம் உள்ளதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் ரமணியின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரமணியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 21 நாளில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.