இன்றைய காலகட்டத்தில், செல்போன் பயன்பாடு என்பது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பேசுவதற்கு மட்டும் அல்லாமல், பொழுதுபோக்கு, விளையாட்டு, அலுவலக வேலைகள் என எல்லா தேவைக்கும் செல்போனையும் கணினியையும் பயன்படுத்துகிறோம்.
இதன் விளைவாக, பல உடல்நலப் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம். குறிப்பாக, நீண்ட நேரம் இவற்றின் திரைகளைப் பார்ப்பதால் கண் பார்வை குறைவு, கண்ணாடி அணியும் நிலை, அடிக்கடி தலைவலி, தூக்கப் பிரச்சனைகள், மற்றும் கவனச்சிதறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மேலும், தலையைக் குனிந்து செல்போனைப் பயன்படுத்துவதால் கழுத்துப் பகுதியில் அதிக சுமை ஏற்பட்டு, நரம்புகள் மற்றும் தசைகளில் அழுத்தம் உண்டாகி “Text Neck Syndrome” என்ற ஒரு நோய் ஏற்படுகிறது. கழுத்தில் இறுக்கம், தோளில் வலி, கூன் விழுந்த நிலையில் காணப்படுவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
எனவே, செல்போனைத் தவிர்க்க முடியாத இன்றைய சூழலில், அதைச் சரியான முறையில் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
செல்போன் மற்றும் கணினி பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்க, நாம் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். கணினி திரையை நம் கண்களுக்கு நேராக, அதாவது கண்களின் உயரத்திற்கு ஏற்ப வைத்துக்கொள்ள வேண்டும்.
இருக்கையின் உயரத்தைச் சரியாகச் சரிசெய்து, உடல் சுமையில்லாமல் நிமிர்ந்து அமர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். அடிக்கடி, சரியான நேர இடைவெளிகளில் கழுத்தையும் தலையையும் நேராக நிமிர்த்தி சிறிய பயிற்சிகளைச் செய்வது நல்லது.
கழுத்து வலி போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, பிசியோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். அதிகமான வலி இல்லாதவர்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் Chin Tuck மற்றும் Neck Flexion போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனுக்கு அடிமையாகிவிட்ட இந்த காலத்தில், அதன் பயன்பாட்டைக் குறைத்து, சரியான நிலையில் பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மிக முக்கியம்.
