அமெரிக்காவில் பெண்கள் தங்களை அழகாகக் காட்டிக் கொள்ள ‘சடலங்களில்’ இருந்து எடுக்கப்படும் கொழுப்பைப் பயன்படுத்தும் புதிய டிரெண்ட் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உயிரிழந்தவர்கள் தானமாக வழங்கிய உடல்களில் இருந்து கொழுப்பைச் சேகரித்து, அதைச் சுத்திகரித்து, டிஎன்ஏ உள்ளிட்ட செல்களை அகற்றிவிட்டு ‘பில்லர்களாக’ (Fillers) மாற்றுகிறார்கள். மார்பகங்கள் மற்றும் இடுப்புப் பகுதியை எடுப்பாகக் காட்டிக் கொள்ள விரும்பும் பெண்கள், இந்தச் சுத்திகரிக்கப்பட்ட கொழுப்பை ஊசி மூலம் தங்கள் உடலில் செலுத்திக் கொள்கிறார்கள். இதற்கு மயக்க மருந்தோ அல்லது பெரிய அறுவை சிகிச்சைகளோ தேவையில்லை என்பதால், அமெரிக்காவின் பெரும் பணக்காரப் பெண்கள் மத்தியில் இந்த வினோத முறைக்கு ஏகப்பட்ட மவுசு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சிகிச்சைக்கு ஒரு முறைக்கு 9 லட்சம் முதல் 90 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உடல் எடையை அதிரடியாகக் குறைத்தவர்கள் மற்றும் இயற்கையாகவே உடலில் போதிய கொழுப்பு இல்லாதவர்கள், தங்களுக்குத் தேவையான பாகங்களை வடிவமைக்க இந்த முறையை நாடுகின்றனர். இது பார்ப்பதற்கு வினோதமாகவும், சர்ச்சைக்குரியதாகவும் இருந்தாலும், அமெரிக்காவில் சட்டப்பூர்வமான விதிமுறைகளைப் பின்பற்றியே இந்தத் தொழில் நடப்பதாகக் கூறப்படுகிறது. சடலங்களில் இருந்து எடுக்கப்படும் பொருட்கள் ‘மறுசுழற்சி’ செய்யப்பட்டு மீண்டும் அழகுக் கலைக்குப் பயன்படுத்தப்படுவது உலக அளவில் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
