உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே அதிரவைத்துள்ளது. கான்பூரைச் சேர்ந்த அருண் நிஷாத் – பிட்டு தம்பதிக்கு மகிழ்ச்சியுடன் பிறந்த பெண் குழந்தை, பிறந்த ஒரே மணி நேரத்தில் மருத்துவமனையின் அலட்சியத்தால் தீயில் கருகி உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க உதவும் கருவியில் (Warmer) வைக்கப்பட்டபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீப்பிடித்து குழந்தை உடல் கருகிப் பலியாகியுள்ளது.

இந்தத் துயரச் செய்தியை உடனடியாகப் பெற்றோரிடம் தெரிவிக்காமல் பல மணி நேரம் மறைத்து வைத்திருந்த மருத்துவமனை நிர்வாகத்தின் செயல் ஆத்திரத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. விஷயம் தெரிந்து கதறிய பெற்றோரும் உறவினர்களும் மருத்துவமனைக்கு முன்பாகத் திரண்டு போராட்டத்தில் குதித்ததால் அந்த இடமே போர்க்களமானது. “பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி ஒப்படைத்த இடத்தில் என் குழந்தையைத் தீயை வைத்து கொன்றுவிட்டார்களே” என்று பெற்றோர் கதறுவது பார்ப்பவர் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

தற்போது இந்த விவகாரத்தில் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது. பணத்தை மட்டுமே குறியாக வைத்து இயங்கும் தனியார் மருத்துவமனைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.