மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள நீம் மலைப்பகுதிக்குச் சுற்றுலா சென்ற 24 வயது இளம்பெண் ஒருவரை, இரண்டு காமக் கொடூரர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது நண்பருடன் அப்பகுதிக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த ரானு மற்றும் சுந்தர் என்ற இரு இளைஞர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்ணுடன் வந்த இளைஞனை அடித்து விரட்டிய அந்தத் துரோகிகள், தனிமையில் சிக்கிய அந்த இளம்பெண்ணை மாறி மாறிப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்தக் கொடுரச் சம்பவத்திற்குப் பிறகு, அந்தப் பெண் எப்படியோ தப்பித்து சாலைக்கு வந்து உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். இது குறித்துத் தகவல் கிடைத்ததும் கௌர்ஜாமர் (Gaurjhamar) போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். துரிதமாகச் செயல்பட்ட காவல்துறையினர், சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளான ரானு மற்றும் சுந்தரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவர்கள் மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சுற்றுலாத் தலங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளது.
