திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 11-ஆம் தேதி விக்னேஷ் – சுகன்யா தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்த நிலையில், தற்போது அந்த குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தையுடன் மாயமான அந்தப் பெண்ணைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்த காவல்துறையினர், இன்று துறையூர் அருகே வைத்து அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.

​முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் மருத்துவமனையில் இருந்த சுகன்யாவுடன் மிகவும் நெருக்கமாகப் பழகி, நட்பை ஏற்படுத்திக்கொண்டது தெரியவந்துள்ளது. பின்னர் குழந்தைக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்ப வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் புகார் அளிக்க, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீஸ் அதிரடியாகச் செயல்பட்டு குழந்தையை மீட்டுள்ளனர். தற்போது அந்தப் பெண்ணிடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மீட்கப்பட்ட குழந்தை மீண்டும் அதன் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.