திமுக அமைச்சரவையில் காங்கிரஸுக்கும் பங்கு அளிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாணிக்கம் தாகூர் போன்றவர்களின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் திமுக-விற்கு இல்லை” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

​தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி அல்லது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இது குறித்துக் கேள்வி எழுப்பினால், அவர்களுக்கு நாங்கள் பதில் சொல்கிறோம்” என்று சாடினார். மேலும், தற்போது தமிழகத்தில் திமுக-விற்கான மக்கள் ஆதரவு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தச் சூழலில் யாராவது புத்திசாலித்தனமாகச் சிந்தித்தால் “ஆட்சியில் பங்கு” என்று பேச மாட்டார்கள் என்றும், கூட்டணியில் தேவையற்ற குழப்பங்களை விளைவிக்க வேண்டாம் என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.