உத்தரபிரதேச மாநிலம் அக்பர்பூரில், தனது நான்கு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த தாயின் உடல் அருகே உள்ள சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முராதாபாத் பகுதியில் சனிக்கிழமை அன்று நான்கு குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.

அப்போது அவர்களது தாய் காசியா கத்தூனை காணவில்லை என்பதால் போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டின் அருகே உள்ள சாக்கடையில் அவரும் சடலமாக மீட்கப்பட்டது இந்தச் சம்பவத்தில் மர்மத்தை அதிகப்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், சவுதி அரேபியாவில் வேலை செய்யும் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, காசியா கத்தூன் தனது குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு, சுத்தியலால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் என நான்கு பிஞ்சுக் குழந்தைகளும் பலியான நிலையில், தாயும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக இவ்வளவு பெரிய விபரீதம் நடந்ததா அல்லது இதற்குப் பின் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.