உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்ச்சியின்போது பள்ளியின் நுழைவாயிலில் இருந்த கான்கிரீட் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும், பள்ளி மாணவர்கள் இருவர் காயமடைந்தனர். சம்பல் மாவட்டம் மதலா கிராமத்தில் உள்ள ஹஸ்னைன் பப்ளிக் பள்ளியில் சனிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றபோது இந்த சம்பவம் நடந்தது.
சுதந்திர தின நிகழ்ச்சியை காண ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் திரண்டிருந்தனர். அப்போது பள்ளியின் பிரதான நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் மூன்று குழந்தைகள் சிக்கியதாக கூறப்படுகிறது. அவர்களில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த 8 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
संभल में स्वतंत्रता दिवस कार्यक्रम के दौरान स्कूल का छज्जा गिरने से 8 साल के बच्चे की मौत हो गई। दो बच्चे घायल हो गए, जिन्हें अस्पताल में भर्ती कराया गया है। हादसा मुख्यालय से 40 किलोमीटर दूर असमोली थाना क्षेत्र के मदाला फतेहपुर गांव स्थित अलहसनैन पब्लिक स्कूल में हुआ #Sambhal pic.twitter.com/hssBvkUVid
— Arun (आज़ाद) Chahal 🇮🇳 (@ArunAzadchahal) August 15, 2026
இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்த இரு மாணவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்றனர்.
மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகளை கண்காணித்தனர். கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்தும், மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கட்டிடத்தில் ஏற்கெனவே ஏதேனும் பாதிப்பு இருந்ததா அல்லது மேற்கூரையில் இருந்த எடையால் இந்த விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில், சம்பல் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
