உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், சைபர் குற்றவாளிகளின் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’  மிரட்டலுக்குப் பயந்து 28 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரீத்பூர் போகி கிராமத்தைச் சேர்ந்த மோனிகா (28) என்ற பெண், கடந்த ஏப்ரல் 27-28 தேதிகளில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அந்த நேரத்தில் அவரது 8 மற்றும் 11 வயது குழந்தைகள் அருகில் தூங்கிக்கொண்டிருந்தனர். காலையில் எழுந்த குழந்தைகள் தாய் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அலறினர். குடும்பத்தினர் வழக்கமான தற்கொலை என நினைத்து போலீசாருக்குத் தெரிவிக்காமல் இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர்.

சுடுகாட்டில் மோனிகாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது, அவரது செல்போன் இடைவிடாமல் ஒலித்தது. அவரது உறவினர் போனை எடுத்தபோது, ஒரு நபர் போலீஸ் சீருடையில் வீடியோ காலில் தோன்றினார். தன்னை ‘கிரைம் பிரான்ச்’ அதிகாரி என்று கூறிக்கொண்ட அந்த நபர், மோனிகா எங்கே என்று அதட்டினார். அவர் இறந்துவிட்டார் என்று கூறியபோதும் நம்பாத அந்த நபர், “அவர் சாகவில்லை, நாடகமாடுகிறார். அவரைப் பேசச் சொல்லுங்கள், இல்லையென்றால் அவர் கணவரைச் சிறையில் தள்ளுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டைச் சோதனையிட்டபோது, மோனிகா எழுதிய தற்கொலைக் கடிதம் சிக்கியது. அதில், அடையாளம் தெரியாத நபர்கள் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், பெரிய தொகையைக் கேட்டு பிளாக்மெயில் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

விசாரணையில், ஐந்து வெவ்வேறு எண்களில் இருந்து மோனிகாவிற்கு வாட்ஸ்அப் அழைப்புகள் வந்தது தெரியவந்தது. அவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி பயமுறுத்திய சைபர் கும்பல், அவரை 24 மணி நேரமும் செல்போன் கேமரா முன்னால் இருக்கச் சொல்லி மிரட்டியுள்ளனர். பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் குடும்பத்தை அழித்துவிடுவோம் என மிரட்டியதால், பயந்துபோன மோனிகா தற்கொலை செய்துள்ளார்.

தற்போது போலீசார் இந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் இதுபோன்ற போலி போலீஸ் மிரட்டல்களுக்குப் பயப்படாமல் சைபர் கிரைம் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.