தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு மெகா ‘செக்’ வைத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராகவும், சீமானின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் வலம் வந்த காளியம்மாள், தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் நடந்த இந்த அதிரடி மாற்றம், சீமானின் அரசியல் கோட்டைக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
“ஒரு உண்மையான தமிழன் தலைமையில் இயங்க வேண்டும் என்றே அதிமுகவில் இணைந்தேன்” என சீமானை மறைமுகமாகச் சாடிய காளியம்மாள், எடப்பாடியாரின் உழைப்பைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்த இணைப்பின் பின்னணியில் ஒரு பலமான தேர்தல் வியூகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்குப் போட்டியாகக் காளியம்மாளைக் களமிறக்க அதிமுக மேலிடம் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
சீமானால் பட்டை தீட்டப்பட்டு, மேடைப் பேச்சில் அவருக்கு நிகராக வளர்ந்த காளியம்மாளே அவருக்கு எதிராக முழங்கினால், அது நாம் தமிழர் கட்சிக்கு மிகப் பெரிய நெருக்கடியைத் தரும்.
குறிப்பாக மீனவ சமூக வாக்குகள் மற்றும் பெண் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அதிமுக பக்கம் திருப்ப எடப்பாடி பழனிசாமி போட்டுள்ள இந்த ராஜதந்திரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
