சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கட்டமைப்பு மற்றும் கலாச்சார வேறுபாடுகள் குறித்து வெளிநாட்டுப் பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ, இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘மிஸ்டர் ஷ்னைடர்’ (Mr. Schnaider) என்ற பெயரில் அறியப்படும் பிரபல பயண வ்லாகர் (Travel Vlogger), சீனாவில் 6 வாரங்கள் பயணம் செய்த பிறகு, அங்கிருந்து 4 மணி நேர விமானப் பயணத்தில் இந்தியா வந்துள்ளார். இந்தியாவில் தரையிறங்கியதுமே தான் ஒரு முற்றிலும் வேறுபட்ட உலகிற்குள் நுழைந்ததாக அவர் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துள்ளதாவது, சீனாவில் தூய்மை, நேர்த்தியான அமைப்பு மற்றும் சீரான நடைமுறைகளைக் கண்டேன். ஆனால், இந்தியாவில் தரை இறங்கியதும் பெரும் ஜனநெருக்கடி, இரைச்சல் மற்றும் வறுமையை நேரடியாகக் கண்டேன். இந்தத் திடீர் மாற்றம் எனக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. முதல் நாளிலேயே பலர் என் கையைப் பிடித்து ‘ப்ளீஸ்.. ப்ளீஸ்..’ என உதவி கேட்டனர். ஆனால், இந்தியக் கலாச்சாரத்தை விமர்சிக்க நான் யார்? இந்தியாவைப் பற்றி இந்தியர்கள் மட்டுமே தீர்ப்பளிக்க முடியும் என்றார்.

 

View this post on Instagram

 

A post shared by @mr.schnaider

இந்த வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்திய இணையவாசிகள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் உருவாகியுள்ளன, சீனாவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் கூறுகையில், “அவர் சொல்வது முற்றிலும் உண்மை. இதைக் கேட்டு நாம் கோபப்படுவதை விட, நமது நாட்டைத் தூய்மையாக மாற்ற முயற்சிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். “உண்மையை ஏற்றுக்கொள்வோம், ஒருநாள் நாம் முன்னேறுவோம்” என மற்றொருவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதேசமயம் சிலர் இந்த ஒப்பீட்டை மறுத்துள்ளனர். “சீனாவில் கடுமையான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு உள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கே சுதந்திரம் அதிகம், அதனால் சவால்களும் அதிகம்  எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற வளர்ந்த நாடுகளிலும் வீடற்றவர்கள் மற்றும் வறுமை இருப்பதைச் சிலர் நினைவூட்டியுள்ளனர்.

இந்தியாவின் பல  மாநிலங்களில் இத்தகைய குழப்பமான சூழல் இல்லை என்றும், பிராந்தியத்திற்குப் பிராந்தியம் இந்தியாவின் அனுபவம் மாறுபடும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அரசின் பொறுப்பை விட, நாட்டைச் சுத்தமாக வைப்பதில் குடிமக்களின் பொறுப்பே அதிகம் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் வளர்ச்சிக்கும் நிதர்சனத்திற்கும் இடையிலான இந்த விவாதம், தற்போது இந்திய சமூக வலைதளங்களில் ‘டிரெண்டிங்’ ஆகி வருகிறது.