பீகாரைச் சேர்ந்த 15 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அசாத்திய பேட்டிங் திறமையால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையுடன், தற்போது சாதனைகளைத் தகர்த்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், வெறும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷியை ரூ. 1.1 கோடி என்ற பெரும் தொகைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் கோடீஸ்வர ஒப்பந்தம் பெற்ற வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 38 பந்துகளில் 101 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைத் தன்வசப்படுத்தினார். நடப்பு சீசனிலும் தனது அதிரடியைத் தொடர்ந்து வரும் வைபவ், சென்னை அணிக்கு எதிராக கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார். நேற்று நடைபெற்ற குஜராத்துக்கு எதிரான ஆட்டத்திலும் 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பங்களித்தார்.
வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் குறித்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளதாவது, “வைபவ் நான் பார்த்த சிறந்த இளம் வீரர்களில் ஒருவர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான (U-19) உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்த இன்னிங்ஸை யாராலும் மறக்க முடியாது. அவர் 21 அல்லது 25 வயதை எட்டும்போது, ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் என்றார்.
மேலும் சச்சின் டெண்டுல்கர், தோனி போன்ற ஜாம்பவான்களைப் போலவே மிக இளம் வயதிலேயே முத்திரை பதித்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
