ஹரியானா மாநிலம் அம்பாலாவில், செல்போன் கடை ஒன்றில் சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் 17 புரோ மேக்ஸ் போனை, போலி போனை வைத்துவிட்டு அசல் போனைத் திருடிச் சென்ற இளம்பெண்ணின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அம்பாலா நகரின் ஜகத்ரி கேட் பகுதியில் ‘வி.கே. மொபைல்ஸ்’ என்ற கடை இயங்கி வருகிறது. கடந்த மார்ச் 30-ஆம் தேதி மாலை, சொகுசு கார் ஒன்றில் வந்திறங்கிய இளம்பெண் ஒருவர், ஐபோன் 17 புரோ மேக்ஸ் மாடல் வாங்குவதற்காகக் கடைக்குள் நுழைந்துள்ளார்.
கடை உரிமையாளர் விவேக் குமாரிடம் சுமார் இரண்டு மணி நேரமாகப் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அந்தப் பெண் போன்களைப் பார்வையிட்டுள்ளார். கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட அவர், கடைக்காரரின் கவனத்தைத் திசைதிருப்பி, தான் மறைத்து வைத்திருந்த போலி ஐபோனை பெட்டிக்குள் வைத்துவிட்டு, அசல் ஐபோனை மின்னல் வேகத்தில் தனது பைக்குள் மறைத்துள்ளார்.
திருட்டை அரங்கேற்றிய பின், “வீட்டிற்குச் சென்று பணம் எடுத்து வருகிறேன்” என்று கூறிவிட்டு அந்தப் பெண் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். நான்கு நாட்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று வேறொரு வாடிக்கையாளருக்கு அந்த ஐபோனை விற்பனை செய்ய விவேக் குமார் முயன்றபோதுதான், பெட்டிக்குள் இருந்தது போலி போன் என்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த உரிமையாளர் உடனடியாகக் கடையிலிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், அந்தப் பெண் கைதேர்ந்த குற்றவாளியைப் போல அசல் போனைத் தனது பையில் வைத்துவிட்டு, போலி போனை மாற்றி வைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இது குறித்து அம்பாலா நகர காவல் நிலையப் பொறுப்பாளர் சுரேஷ் கூறுகையில், “திருட்டு குறித்துப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்தப் பெண்ணையும், அவர் வந்த காரின் எண்ணையும் வைத்துத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. எழுத்துப்பூர்வமான புகார் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். மேலும் பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சொகுசு காரில் வந்த பெண் ஒருவரே இத்தகைய திருட்டில் ஈடுபட்டது அப்பகுதி வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
iPhone का क्रेज या हाथ की सफाई?
अंबाला में एक मोबाइल शॉप में ग्राहक बनकर आई युवती ने चालाकी से दुकानदार को चकमा देकर लाखों रुपये की कीमत का iPhone 17 Pro Max चोरी कर लिया. पूरी वारदात दुकान में लगे CCTV कैमरे में कैद हो गई, जिसका वीडियो अब सोशल मीडिया पर वायरल है#Iphone pic.twitter.com/yNluKZkXEJ
— NDTV India (@ndtvindia) April 4, 2026
