இந்தியத் திருமணங்கள் என்றாலே மேளதாளம், உறவினர்களின் வருகை என ஒரு திருவிழா கோலமாகவே காட்சியளிக்கும். அந்த வகையில், மார்வாரி குடும்பம் ஒன்று திருமணத்திற்காகத் தனி ரயில் பெட்டியையே முன்பதிவு செய்து, பயணத்தின் போதே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

சமீபத்தில் ‘X’ தளத்தில் அனந்த் என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ரயில் பெட்டியின் பெயர் பலகைக்கு மாலை அணிவித்து, விருந்தினர்களை வரவேற்கும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ரயில் கிளம்பிய உடனே, பெட்டிக்குள் இருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக நடனமாடி, அந்த இடத்தையே ஒரு ‘நடமாடும் திருமண ஊர்வலமாக’  மாற்றினர்.

ரயில் பெட்டியின் இருக்கைகளில் போர்வைகள், உடமைகள் மற்றும் பரிசுப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பயணத்தின் இடையே மணப்பெண் கேக் வெட்ட, உறவினர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இசை முழங்க, உறவினர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த களேபரங்களுக்கு இடையே தனது கடமையைச் செய்ய வந்த டிக்கெட் பரிசோதகர் (TTE), அங்கிருந்த மகிழ்ச்சியான சூழலைக் கண்டு புன்னகையுடனே கடந்து சென்ற காட்சி பார்ப்பவர்களைக் கவர்ந்தது.

இந்த வீடியோவிற்கு இணையவாசிகளிடையே ஆதரவும், விமர்சனமும் கலந்த எதிர்வினைகள் கிடைத்து வருகின்றன: உறவினர்களுடன் இணைந்து ரயிலில் பயணம் செய்வதே ஒரு தனி சுகம். இது போன்ற கொண்டாட்டங்கள் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் எனப் பலர் பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில் தனியார் கொண்டாட்டங்களுக்காக முழு ரயில் பெட்டியை முன்பதிவு செய்வது அவசியமா? சாதாரண பயணிகள் ஒரு இருக்கை கிடைக்காமல் தினமும் அவதிப்படும் நிலையில், பொதுமக்களின் வசதியையும் கருத்தில் கொள்ள வேண்டும்” எனச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் ஆடம்பரமான திருமண மண்டபங்களைத் தாண்டி, பயணத்தையே ஒரு கொண்டாட்டமாக மாற்றிய இந்த மார்வாரி குடும்பத்தின் வீடியோ, தற்போது இணையத்தில் ‘ட்ரெண்டிங்’ ஆகி வருகிறது.