அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், ஈரானுக்குப் புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்க சீனா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவு அமைப்புகள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள சூழலில், இந்த அமைதிக் காலத்தைப் பயன்படுத்தி ஈரான் தனது ஆயுத பலத்தைப் பெருக்க முயல்வதாக அமெரிக்கா கருதுகிறது. குறிப்பாக, சீனா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தரைவழியாகவோ அல்லது மூன்றாம் நாடுகளின் மூலமாகவோ ஈரானுக்கு ரகசியமாக அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக மூன்று முக்கிய ஆதாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

சீனா வழங்கவுள்ள இந்த ஆயுதங்கள் ‘மேன்பேட்ஸ்’ (MANPADS) எனப்படும் தோளில் வைத்து இயக்கக்கூடிய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகும். ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் எளிதாகக் கையாளக்கூடிய இந்த ஏவுகணைகள், குறைந்த உயரத்தில் பறக்கும் போர் விமானங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். கடந்த கால மோதல்களில் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களுக்கு இத்தகைய ஆயுதங்கள் பெரும் சவாலாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டனில் உள்ள சீன தூதரக செய்தித் தொடர்பாளர் இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார். “சீனா ஒரு பொறுப்புள்ள நாடு. மோதலில் ஈடுபட்டுள்ள எந்தத் தரப்பிற்கும் நாங்கள் ஆயுதங்களை வழங்கவில்லை. அமெரிக்கா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதை நிறுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் – இஸ்ரேல் மோதலில் அமைதியை ஏற்படுத்தவே சீனா விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15 (F-15) போர் விமானம், தோளில் இருந்து ஏவப்பட்ட வெப்பத்தைத் தேடிச் செல்லும் ஏவுகணையால் தாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த ஏவுகணை சீனத் தயாரிப்பா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஈரான் ‘புதிய வான் பாதுகாப்பு தொழில்நுட்பத்தைப்’ பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயைப் பெறுவதில் சீனா பெரிதும் சார்ந்துள்ளது. எனவே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பகிரங்கமாகப் போரில் ஈடுபடாமல், ஈரானின் ‘உற்ற நண்பன்’ என்ற பிம்பத்தைத் தக்கவைக்க சீனா முயல்வதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஏவுகணைகள் ‘தற்காப்புக்கானவை’ (Defensive) என்று வாதிட்டு, சர்வதேச அழுத்தத்திலிருந்து தப்பிக்க சீனா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அடுத்த மாதம் அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திக்க உள்ள நிலையில், இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.