சீனா, பெரும் எல்லைக் கட்டுப்பாட்டு நிலையங்களில் கூட்டக் கட்டுப்பாடு மற்றும் பயணிகள் வழிகாட்டுதலுக்காக மனித உருவ ரோபோக்களை பயன்படுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளது. வியட்நாம் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு முக்கிய எல்லைச் சோதனை மையத்தில் பயன்பாட்டிற்காக, ஷென்சென் நகரை தலைமையிடமாகக் கொண்ட யூபிடெக் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு சீனம் கணிசமான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

37 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ₹330 கோடி) மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், UBTech இன் மேம்பட்ட “வாக்கர்” மனித உருவ ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தங்கள் பேட்டரியை தாமாகவே மாற்றிக்கொள்ளும் திறன் கொண்ட தன்னிறைவு சக்தி அமைப்பு இதில் முக்கிய அம்சமாக உள்ளது. டிசம்பரில் இந்த ரோபோக்களின் விநியோகம் தொடங்கவுள்ளது.

இந்த சோதனைத் திட்டத்தின் மூலம் ரோபோக்கள் எல்லை மேலாண்மை பணிகளில் உதவி, பயணிகளுக்கு வழிகாட்டுதல், தளவாட மற்றும் பொது நிர்வாக உதவி ஆகிய நிஜ உலகப் பணிகளில் எப்படி செயல்படுகின்றன என்பது பரிசோதிக்கப்படுகிறது. உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில் பேஜிங் அரசு மனித உருவ ரோபோக்கள் உற்பத்தியை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. ஆலோசனை நிறுவனம் லீடர்போட் தெரிவித்த கணிப்பின்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் சீனாவின் மனித உருவ ரோபாட்டிக்ஸ் துறை ¥82 பில்லியன் மதிப்பை எட்டும் எனவும், உலகளாவிய விற்பனையில் பாதியை பிடிக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஷாங்காயில் தயாரிக்கப்பட்ட ரோபோ 100 கிலோமீட்டர் தூரத்தை தாண்டிய சாதனை போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும், பெரிய அளவிலான வணிக பயன்பாடுகள் இன்னும் குறைவாக உள்ளன. இந்த எல்லைச் சோதனை அந்த இடைவெளியை நிரப்பும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் சில நிதி நிறுவனங்கள், உறுதிப்படுத்தப்பட்ட வணிக ஆர்டர்கள் இல்லாத நிலையிலும் உற்பத்தி வேகமாக உயர்ந்து வருவது அதிக திறன் அபாயத்தை உருவாக்கும் என எச்சரித்துள்ளன. மேலும் சோதனை முடிவுகள் அடுத்த கட்ட ரோபோப் பயன்படுத்தல் திட்டங்களுக்கு முக்கிய வழிகாட்டுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.