ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், “களத்தில் இல்லாதவர்களை நாங்கள் எதிர்க்க மாட்டோம்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், “நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்திற்கு பூமிபூஜை நிகழ்ச்சி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:—

வானத்தில் ஒரே சந்திரன் தான் இருப்பது போல, பூமியில் ஒரே ஒரு ராமச்சந்திரன் தான். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. நடிகர்களை பார்க்க கூட்டம் கூடும். விஜய் நடிகர் என்பதால் மற்ற நடிகர்களை விட கொஞ்சம் அதிகமாக கூட்டம் கூடுகிறது. இவரை விட வடிவேலு, நயன்தாரா போன்ற நடிகர்களுக்கும் கூட்டம் கூடும்.

அ.தி.மு.க. களத்தில் இல்லை என்று கூறுவதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்? அ.தி.மு.க. தேர்தல் களத்தில் இருக்கிறதா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். தலைமைக்கழகத்தில் விருப்ப மனுக்கள் வாங்கும் இடத்தில் கூடும் கூட்டத்தைப் பார்த்தாலே, யார் உண்மையில் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியும்.

மேலும் `தமிழக அரசியலில் ஆலமரமாக விளங்கும் அ.தி.மு.க.வை விமர்சிக்கக் கூடாது. நேற்று கட்சி தொடங்கிய விஜய்க்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே நடிகர்கள் சிவாஜி கணேசன், டி. ராஜேந்தர், பாக்கியராஜ், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கட்சி தொடங்கியுள்ளனர். அவர்களைப் போல விஜயும் ஆகிவிடக்கூடாது. எனவே, விஜய் மற்ற கட்சிகளை விமர்சிக்கும் போது நாவை அடக்கி பேச வேண்டும் என்று கூறினார்.