டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 21 வயது வாலிபர் ஒருவரைக் கைது செய்துள்ள டெல்லி போலீசார், இரண்டு சிறுவர்களைக் காவலில் எடுத்து சில மணி நேரங்களிலேயே வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

திங்கள்கிழமை நடந்த இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு துரிதமாகச் செயல்பட்ட போலீசார் நிக்கி (21) என்பவரைக் கைது செய்து, சட்டத்துடன் முரண்பட்ட இரு சிறுவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர்கள், உயிரிழந்த சிறுவனுக்கும் தங்களுக்கும் இடையே இருந்த சில தனிப்பட்ட பகை காரணமாகவே இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

<a href=”http://

“>

கொலையுண்ட சிறுவனும், குற்றவாளிகளும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ள போலீசார், இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, நியூ உஸ்மான்பூரின் பகத் சிங் காலனி பகுதியில் 26 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட மற்றொரு அதிர்ச்சி சம்பவமும் செவ்வாய்க்கிழமை காலை அரங்கேறியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த அந்த இளைஞரை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர் பிரம்மபுரியைச் சேர்ந்த லலித் என்பது தெரியவந்தது.

தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனையிட்டு முக்கிய ஆதாரங்களைச் சேகரித்துள்ள நிலையில், நியூ உஸ்மான்பூர் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடவும், இந்த கொலையின் பின்னணியைக் கண்டறியவும் டெல்லி போலீசார் தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.