நாளை முதல் வீட்டு கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் அடுத்த சிலிண்டருக்கு 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும் எனப் புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்காகவோ அல்லது முன்னெச்சரிக்கையாகவோ இந்தத் தேதிகளுக்கு முன்பே சிலிண்டர் புக் செய்ய முயற்சித்தால், சாப்ட்வேர் மூலமாக அந்த முன்பதிவு தானாகவே நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்களின் இந்தத் திடீர் கட்டுப்பாடு நடுத்தரக் குடும்பத்தினர் மற்றும் கிராமப்புற மக்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய குடும்பங்களில் சீக்கிரமே கேஸ் தீர்ந்துவிட்டால், அடுத்த சிலிண்டர் கிடைக்கும் வரை மக்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எனச் சொல்லப்பட்டாலும், சாமானிய மக்களின் பட்ஜெட்டிலும் சமையலிலும் இந்த மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
