சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாளான இன்று, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் புதிய சிறைச்சாலை அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, “குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதிலும், குற்றங்களைக் குறைப்பதிலுமே திராவிட மாடல் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சிறைச் சாலைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதை விட, சிறையில் இருப்பவர்களைத் திருத்தி, அவர்களுக்கு நல்வழி காட்டுவதே அரசின் நோக்கம்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “சிறைச்சாலைகளை அதிகப்படுத்துவதற்குப் பதில், குற்றம் இழைத்தவர்கள் திருந்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியை அரசு மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு தற்போது நவீன கிளைச் சிறைகள் ஏதும் தேவையில்லை. அந்த வகையில், கலசப்பாக்கத்தில் புதிய சிறைச்சாலை அமைக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். சிறைத்துறையில் கொண்டு வரப்படும் இந்த சீர்திருத்த மனப்பான்மைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
