உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், சிவபெருமான் வேடமணிந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஜ்வாலாப்பூர் பகுதியில் உள்ள சுபாஷ் நகரைச் சேர்ந்த தீபக் சைனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படாமல் தப்பிக்க அவர் “காலனேமி பாபா” என்ற போலி அடையாளத்தில், சிவபெருமான் உடை அணிந்து இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் தகவலின்படி, தீபக் சைனி தன்னை “திரிகாலதர்ஷியின் பக்தர்” என்றும், “எல்லாம் அறிந்தவன்” என்றும் கூறி, பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி தவறான செயல்களில் ஈடுபட தூண்டியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியிடம், அவளது விருப்பங்களை நிறைவேற்றுவதாகக் கூறி நம்ப வைத்த அவர், பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“ஆபரேஷன் காலனேமி” என்ற சிறப்பு நடவடிக்கையில், வேடமணிந்து இருந்த அவரை ஹரித்வார் போலீசார் பிடித்தனர். இந்த குற்றவாளியால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.