மேற்கு வங்காளம் கூச் பெஹார் மாவட்டம் தின்ஹாட்டா சல்மாரா பகுதியில், பாஜக சித்தாந்தத்தை ஆதரித்ததற்காக 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தொண்டர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகஸ்ட் 7 அன்று நடந்த இந்த சம்பவம் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார், ஆம்புலன்சில் அந்தப் பெண் இருந்த காட்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “TMC ஆதரவில் உள்ள நபர்கள், கர்ப்பிணி பெண்ணை வயிற்றில் உதைத்தனர். இது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்” என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், முதலமைச்சர் மம்தா பானர்ஜி பெண்கள் மீதான வன்முறைகளில் மௌனம் சாதிப்பது வெட்கக்கேடானது என்றும் குற்றம்சாட்டினார்.

பாஜக கூச் பெஹார் ஏற்பாட்டுத் தலைவர் அபிஜித் பர்மன், இந்தத் தாக்குதல் சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஷுவேந்து அதிகாரியின் வாகனத் தொடரணியை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, TMC மேற்கொண்ட “பழிவாங்கும் நடவடிக்கை” என கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் தாயார் ஜெயந்தி பர்மன், “சில TMC கும்பல்கள் வீட்டுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கத் தொடங்கினர். எனது கர்ப்பிணி மகள் தடுக்க முயன்றபோது, அவர்கள் வயிற்றில் உதைத்தனர்” என்று குற்றம்சாட்டினார். மேலும், ஆம்புலன்ஸ் வருவதைத் தடுத்து, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவமனை வட்டாரங்களின் தகவலின்படி, அந்தப் பெண்ணின் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவத்தில் வடக்கு வங்காள மேம்பாட்டு அமைச்சர் உதயன் குஹா உட்பட 42 பேருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உள்ளூர் TMC தலைவர் பிஷு தார், குற்றச்சாட்டுகளை மறுத்து, “இது பாஜகவின் உள் கோஷ்டி பூசலில் இருந்து உருவானது. திரிணாமுல் கட்சிக்கு இதற்கு எந்த தொடர்பும் இல்லை” என விளக்கம் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
