எலுமிச்சை பழச்சாறு அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்துப் பிரபல ஆரோக்கிய நிபுணர் டாக்டர் சுபம் வத்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளத் தகவல்கள் மக்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றன.

எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. தினமும் எலுமிச்சை நீர் அருந்துவது உடலின் வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக உயர்த்துகிறது. இதனால் சளி, இருமல் மற்றும் பருவகால நோய்த்தொற்றுகளிலிருந்து உடல் பாதுகாக்கப்படுகிறது.

செரிமானப் பிரச்சனைகள், கேஸ் மற்றும் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இது கல்லீரலில் பித்த நீர் உற்பத்தியை அதிகரித்துச் செரிமானத்தைச் சீராக்குவதுடன், குடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் எலுமிச்சை நீர் சிறந்த தேர்வாகும். இதில் உள்ள ‘பெக்டின் ஃபைபர்’ அடிக்கடி ஏற்படும் பசியைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்துத் தேவையில்லாத கொழுப்பு மற்றும் கலோாிகளை வேகமாக எரிக்க உதவுகிறது.

சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் சுருக்கங்களைக் குறைத்து இயற்கை பொலிவைத் தருவதுடன், சிறுநீரகத்தில் கல் உருவாவதையும் இது தடுக்கிறது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் லேசான வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதே அதிக நன்மைகளைத் தரும் என மருத்துவர் பரிந்துரைக்கிறார்.