பரபரப்பான வாழ்க்கை முறையால் ஏற்படும் சோர்வு மற்றும் தசை பலவீனத்தைப் போக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கச் சரியான ஊட்டச்சத்து அவசியம். தசைகளை வலுப்படுத்தவும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும் சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த துணை உணவுகளுக்குப் பதிலாக வீட்டிலேயே புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் செய்து சாப்பிடலாம்.
உலர் பழங்கள் கலந்த ‘கிரீக் தயிர்’ ஒரு விரைவான காலை உணவாகும். முக்கால் கப் கிரீக் தயிருடன் பாதாம், பிஸ்தா போன்ற உலர் பழங்கள், சிறிதளவு தேன் மற்றும் பெர்ரி பழங்களைக் கலந்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான உடனடி புரதம் கிடைக்கிறது.
‘அவகேடோ முட்டை டோஸ்ட்’ மற்றொரு புரதம் நிறைந்த உணவாகும். முழு தானிய ரொட்டியை வறுத்து, அதன் மீது மசித்த அவகேடோ பழக் கலவையைப் பரப்பி, அதனுடன் வெண்ணெயில் சமைத்த முட்டையை வைத்து மிளகுத்தூள் தூவிச் சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த ஊட்டச்சத்தைத் தரும்.
காலையில் அவசரமாக வேலைக்குச் செல்பவர்கள் ‘சியா விதைகள் புட்டிங்’ தயார் செய்யலாம். சியா விதைகள், பால் மற்றும் புரோட்டீன் பொடி (அல்லது வேர்க்கடலை வெண்ணெய்) ஆகியவற்றை இரவே கலந்து பிரிட்ஜில் வைத்து, காலையில் உலர் பழங்கள் சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது கிரீக் தயிருடன் பழங்கள் மற்றும் நீர் சேர்த்து ‘புரோட்டீன் ஸ்மூத்தி’ செய்தும் பருகலாம்.
‘பனீர் பான்கேக்’ சுவையும் சத்தும் நிறைந்த சிறந்த காலை உணவாகும். பனீர், முட்டை, தயிர், தேன் மற்றும் ஓட்ஸ் பொடி ஆகியவற்றைச் சேர்த்து மிருதுவாக அரைத்து, தோசைக் கல்லில் பான்கேக்குகளாகச் சுட்டு எடுப்பதன் மூலம் ஆரோக்கியமான புரதச்சத்து நிறைந்த உணவை எளிதாகப் பெறலாம்.
