சிறந்த பீல்டருக்கான தங்கப் பதக்கத்தை வென்றார் விக்கெட் கீப்பர் பேட்டர் கே.எல் ராகுல்..

2023 ஒருநாள் உலக கோப்பையில் ஒவ்வொரு போட்டிக்கும் பிறகு சிறந்த பீல்டருக்கு பதக்கங்களை வழங்கும் புதிய டிரெண்ட் இந்திய டிரஸ்ஸிங் ரூமில் தொடங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, போட்டி முழுவதும் களத்தில் மிகுந்த ஆற்றலுடன் காணப்பட்ட விராட் கோலிக்கு சிறந்த பீல்டர் விருது வழங்கப்பட்டது. பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷர்துல் தாக்கூருக்கு சிறந்த பீல்டர் பதக்கம் வழங்கப்பட்டது. இந்நிலையில்  பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, டிரஸ்ஸிங் ரூமில் ​​​​சிறந்த பீல்டர் விருதை வென்ற வீரரின் பெயரும் மிகவும் வித்தியாசமாக அறிவிக்கப்பட்டது.

சிறந்த ஃபீல்டருக்கான விருதை கேஎல் ராகுல் பெற்றார் :

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டது. இந்த வெற்றிக்குப் பிறகு, டிரஸ்ஸிங் ரூமில், ஆட்டத்தின் போது களத்தில் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்களைப் பற்றி ஃபீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் பேசினார், அதில் ரவீந்திர ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோரைப் பாராட்டினார். இதைத் தொடர்ந்து, பீல்டிங் பயிற்சியாளர் பதக்கம் வழங்க வீரரின் படத்தை திரையில் காட்டினார், அது கே.எல்.ராகுலுடையது. எனவே ராகுலுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது. அந்த பதக்கத்தை ஷர்துல் தாக்கூர் ராகுலுக்கு கழுத்தில் அணிவித்தார்.. அப்போது விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, கில் உட்பட அனைவரும் கைதட்டி சிரித்து பாராட்டினர். இதில் குறிப்பாக விராட் கோலி, கில் கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் ஒரு கேட்ச் எடுத்த நிலையில், பிட்ச்சைப் புரிந்துகொண்டு ஸ்லோ பந்துகளிலும் பந்தை நன்றாகப் பிடித்தார். இந்தப் போட்டியில், இந்திய அணியிடம் இருந்து கூடுதல் ரன்களாக பாகிஸ்தானுக்கு 1 வைட் மற்றும் 1 பை மட்டுமே கிடைத்தது. அதேநேரம், கே.எல்.ராகுலும் ஆட்டமிழக்காமல் 19 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது..

தற்போது இந்திய அணியின் அடுத்த ஆட்டம் வங்கதேச அணியுடன் மோதுகிறது.

இந்த மெகா நிகழ்வில் தனது முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, இந்திய அணி இப்போது ஒருநாள் உலகக் கோப்பை 2023 இன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 6 புள்ளிகளுடன், நிகர ரன் வீதமும் 1.821 ஆக உள்ளது. தற்போது அந்த அணி தனது அடுத்த ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் அக்டோபர் 19-ம் தேதி புனே மைதானத்தில் விளையாட உள்ளது. இந்திய அணியின் ஆட்டத்தை பார்க்கும்போது கிட்டத்தட்ட அரையிறுதிக்கு ஒரு காலை எடுத்து வைத்துவிட்டதாகவே கூறலாம். இத்தகைய சூழ்நிலையில், இந்திய அணிக்கு அரையிறுதிக்கு செல்வதற்கான பாதை இப்போது எளிதாகி வருகிறது.