ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது..

2023 ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் சத்ரான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.. இதில் இப்ராஹிம் சத்ரான் ஒருபுறம் பொறுமையாக ஆடிக் கொண்டிருக்க, குர்பாஸ் தொடக்கம் முதலே பவுண்டரி, சிக்சர் என அதிரடியாக ஆடினார். குர்பாஸ் அதிரடியால் ஆப்கானிஸ்தான் அணி 12.4 ஓவரில் 100 ரன்கள் கடந்தது. டி20 கிரிக்கெட் போல ஆப்கானிஸ்தான் அணி ஆடிக்கொண்டிருந்தது.

பின் அடில் ரஷீத்தின் 17 வது ஓவரில் இப்ராகிம் சத்ரான் 48 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். அதன்பின் வந்த ரஹ்மத் ஷா (3 ரன்) அடில் ரஷீத் வீசிய 19ஆவது ஓவரின் 4வது பந்தில் ஜோஸ் பட்லரால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். அதன் பின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி களமிறங்கி 5வது பந்தை எதிர்கொண்டார். அப்போது அவர் ஆப்சைடு அருகில் அடித்து விட்டு உடனே ஓட அழைக்க, மறுமுனை கிரீசில் நின்ற குர்பாஸ் தேவையில்லாமல் ஓடி  வில்லியால் (சப் பீல்டர்) ரன் அவுட் ஆனார். குர்பாஸ் 57 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 80 ரன்கள் விளாசினார். இந்த ரன் அவுட் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

இதையடுத்து வந்த ஒமர்சாய் 19 ரன்கள், ஹஷ்மத்துல்லா 14 ரன்கள், முகமது நபி 9 ரன்கள் என சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டனர். இருப்பினும் இக்ராம் அலிகில்  மறுபுறம் நிலைத்து நின்று பொறுமையாக ஆடினார். பின் ரஷீத் கான் (23 ரன்கள்) ஒரு சிறிய கேமியோ ஆடி அவுட் ஆனார். தொடர்ந்து அரைசதமடித்த இக்ராம் 58 ரன்களில் அவுட் ஆனார். கடைசியில் முஜிப் உர் ரஹ்மான் அதிரடியாக 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின் ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5வது பந்தில் நவீன் உல் ஹக் (5) ரன் அவுட் ஆனார்.

ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியது. பரூக்கி 2 ரன்னில் அவுட் ஆகாமல் இருந்தார். ஒருவேளை குர்பாஸ் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஆப்கான் அணி கூடுதலாக 40 ரன்கள் எடுத்திருக்கலாம். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக அடில் ரசீத் 3 விக்கெட்டுகளும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். மேலும் ரீஸ் டாப்லி,  லிவிங்ஸ்டோன், ஜோ ரூட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பரூக்கி வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஜானி பேர்ஸ்டோ 2 ரன்களில் அவுட் (எல்பிடபிள்யு) ஆனார். இதையடுத்து துவக்க வீரர் டேவிட் மலான் மற்றும் ஜோ  ரூட் இருவரும் சேர்ந்து ஆடிக் கொண்டிருந்த நிலையில், முஜிப் உர் ரஹ்மான் வீசிய 7வது ஓவரில் ஜோ ரூட்டை (11 ரன்கள்) கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். பின் ஹாரி புரூக் மற்றும்  டேவிட் மலான் கைகோர்த்து ஆடிக் கொண்டிருந்த நிலையில், முகமது நபியின் 13-வது ஓவரில் மலான் (32 ரன்கள்) அவுட் ஆனார்.

பின் வந்த கேப்டன் ஜோஸ் பட்லரும் நிலைக்கவில்லை. பட்லர் 18 பந்துகளில் 9 ரன்களுக்கு நவீனின் பந்தில் கிளீன் போல்ட் ஆனார். இதையடுத்து வந்த லிவிங்ஸ்டோனை (10 ரன்கள்) ரஷித் கான் எல்பி டபிள்யூ முறையில் அவுட் செய்தார். இங்கிலாந்த அணி 20.4 ஓவரில் 117 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்தது. ஆப்கானிஸ்தானை அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்தது.

பின் வந்த சாம் கரன் (10 ரன்கள்), கிறிஸ் வோக்ஸ் (9 ரன்கள்) என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆப்கானின் சுழற்பந்து வீச்சுக்கு விக்கெட்டுகளை விட்ட போதிலும், மறுபுறம் ஹாரி புரூக் மட்டுமே தனி ஒரு ஆளாக அரைசதம் கடந்தார். பின் ஹாரி புரூக்கும் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 34.2 ஓவரில் 169/8 என இருந்தது. பின் கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. தொடர்ந்து அடில் ரஷீத் மற்றும் மார்க் வுட் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடினர். பின் அடில் ரஷீத் (13 பந்துகளில் 20 ரன்கள்) அதிரடியாக ஆடிய நிலையில், அவர் ரசீத் கானின் 39வது ஓவரில் ஸ்லிப்பில் நின்ற நபியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து மார்க் வுட் 18 ரன்னில் அவுட் ஆனார். ரீஸ் டாப்லி 15 ரன்னில் அவுட் ஆகாமல் இருந்தார்.

முடிவில் இங்கிலாந்து அணி 40.3 ஓவரில் 215 க்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கான் அணியின் அதிகபட்சமாக முஜீப் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 3விக்கெட்டுகளும், நபி 2 விக்கெட்டுக்களும் எடுத்தனர். இதனால் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான் அணி. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை பதிவு செய்து 5வது இடத்தில் உள்ளது.

உலக கோப்பையில் இங்கிலாந்து தோல்வி : 

2011 – அயர்லாந்து இங்கிலாந்தை வென்றது.

2015 – பங்களாதேஷ் இங்கிலாந்தை வென்றது.

2023 – ஆப்கானிஸ்தான் இங்கிலாந்தை வென்றது.

உலக கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தானுக்கு 2வது வெற்றி :

2015 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.

2019 உலகக் கோப்பையில் அனைத்து ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது.

இன்று, 2023 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.