அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா கண்ட 76 ரன்கள் வித்தியாசத்திலான தோல்வி, அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்தத் தோல்வி தற்செயலானது அல்ல, மாறாக இந்திய அணியின் தொடர் பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குரூப் சுற்று முதலே இந்திய அணி ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு எதிராகத் திணறி வருகிறது. குறிப்பாக, முதல் மூன்று வரிசை பேட்டர்களும் இடதுகை ஆட்டக்காரர்களாக (அபிஷேக் சர்மா, ஈஷான் கிஷன், திலக் வர்மா) இருப்பதால், எதிரணிகள் எளிதாக ஆஃப்-ஸ்பின்னர்களைப் பயன்படுத்தி இந்தியாவை முடக்குகின்றன.
திலக் வர்மா கடந்த ஐந்து போட்டிகளில் பெரிய அளவில் ரன் எடுக்கவில்லை. எனவே, அவருக்குப் பதிலாக மீண்டும் சஞ்சு சாம்சன் – அபிஷேக் சர்மா தொடக்க கூட்டணியைக் களமிறக்குவதே புத்திசாலித்தனம். ஐபிஎல் தொடரில் மூன்றாம் வரிசையில் சதம் விளாசிய அனுபவம் கொண்ட இஷான் கிஷனை அந்த இடத்திற்கு மாற்றுவது ஆஃப்-ஸ்பின் சவாலை எதிர்கொள்ள உதவும்.
கடந்த 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தபோது அக்ஷர் படேல் களமிறங்கி 47 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் அதே போன்ற இக்கட்டான சூழலில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கி 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்ட அக்ஷர் படேலுக்கு ‘ஓய்வு’ அளிக்கப்பட்டது ஏன்? என்பது புரியாத புதிராக உள்ளது. தென்னாப்பிரிக்க அணியில் குறைவான இடதுகை பேட்டர்களே இருந்தும், அவர்கள் கேசவ் மகராஜ் என்ற இடதுகை ஸ்பின்னரைத் தைரியமாகப் பயன்படுத்தினர். ஆனால், இந்தியா அக்ஷர் படேலைத் தவிர்த்தது ‘தவறான உத்தி’ என விமர்சிக்கப்படுகிறது.
போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மாவை நீக்க வேண்டும் என்ற ஆலோசனையை கேப்டன் சூர்யகுமார் யாதவ் சிரித்துக்கொண்டே தள்ளுபடி செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், சூப்பர்-8 சுற்றில் மற்றொரு தோல்வி ஏற்பட்டால் இந்தியா தொடரிலிருந்து வெளியேறும் அபாயம் உள்ளதால், இனிமேலாவது கேப்டன் தீவிரமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். வரும் வியாழக்கிழமை ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், இந்தியா தனது பழைய வெற்றிக் கூட்டணிக்குத் திரும்பவில்லை என்றால் நிலைமை மோசமாகும் என்பதே நிதர்சனம்.
