தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, மைதானத்தின் டக்-அவுட் பகுதியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பிற பயிற்சியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

188 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 111 ரன்களுக்குச் சுருண்டது ரசிகர்களை மட்டுமல்லாது, கேப்டன் சூர்யகுமார் யாதவையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. போட்டியின் முடிவில், டக்-அவுட்டில் அமர்ந்திருந்த சூர்யகுமார், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் உதவியாளர்களுடன் தீவிரமாக ஏதோ ஒரு விஷயத்தை விவாதித்துக் கொண்டிருந்தார்.

அவரது உடல் மொழியிலிருந்து, போட்டிக்கு முன்பாக வகுக்கப்பட்ட திட்டங்கள் சரியாகச் செயல்படுத்தப்படாதது குறித்து அவர் ஆவேசமாகப் பேசுவது தெரிகிறது. கேப்டன் கோபமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, கௌதம் கம்பீர் மற்றும் பிற ஊழியர்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி 187 ரன்கள் குவிக்க முக்கியக் காரணமாக அமைந்தது டேவிட் மில்லர் மற்றும்  டிரிஸ்டன் ஸ்டப்ஸின் சிறப்பாக ஆடியதுதான். குறிப்பாக, ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் ஸ்டப்ஸ் 20 ரன்களை விளாசினார். இந்த ரன் குவிப்பே இந்தியாவிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

பந்துவீச்சில் கடைசி நேரத்தில் சொதப்பிய இந்தியா, பேட்டிங்கிலும் மீள முடியாமல் போனது. ஷிவம் துபே (42 ரன்கள்) தவிர வேறு எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இந்தியாவின் இந்த மோசமான தோல்வியும், அதைத் தொடர்ந்து டக்-அவுட்டில் நடந்த கேப்டன் – பயிற்சியாளர் விவாதமும் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் போட்டிகளில் அணியின் வியூகங்களில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு சாட்சியாகப் பார்க்கப்படுகிறது.