மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று அதிரடியாக வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 85.20 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் 3.19 சதவீதம் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2026-ஆம் ஆண்டிற்கான இந்தப் பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற்றன. சுமார் 18.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதிய நிலையில், அதில் 10 லட்சம் மாணவர்களும், 8 லட்சம் மாணவிகளும் பங்கேற்றனர்.

​மாணவர்கள் தங்களது முடிவுகளை cbseresults.nic.in அல்லது cbse.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவு எண், பள்ளி குறியீடு மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டுத் தெரிந்துகொள்ளலாம். இணையதளம் தவிர்த்து டிஜிலாக்கர் (DigiLocker) மற்றும் உமாங் (UMANG) செயலிகள் மூலமாகவும் டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், எஸ்எம்எஸ் மற்றும் தொலைபேசி அழைப்பு வாயிலாகவும் முடிவுகளை அறியலாம். ஏற்கனவே தமிழக மாநில பாடத்திட்ட 12-ஆம் வகுப்பு முடிவுகள் மார்ச் 8-ஆம் தேதியே வெளியான நிலையில், தற்போது சிபிஎஸ்இ முடிவுகளும் வெளியாகியிருப்பது உயர்கல்வி சேர்க்கையை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.