மத்தியப்பிரதேச மாநிலம் டிக்கம்கர் மாவட்டத்தில் உள்ள பிஜ்ரௌதா கிராமத்தில், வரதட்சணை கொடுமையால் ஒரு திருமணம் பாதியிலேயே நின்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஷகாதத் கான் என்பவர் தனது மகளுக்குத் திருமணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
மேலும் திருமணச் சடங்குகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், மணமகன் தரப்பினர் திடீரென 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், புல்லட் மோட்டார் சைக்கிளும் வேண்டும் என்று புதிய நிபந்தனையை விதித்தனர். மணமகளின் தந்தையால இந்தத் திடீர் கோரிக்கையை நிறைவேற்ற இயலாததால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தத் தகராறின் உச்சகட்டமாக, மணமகன் திருமணச் சடங்குகளை அரைகுறையாக விட்டுவிட்டு, தனது ஊர்வலத்துடன் அவ்விடத்தை விட்டுத் தப்பியோடினார். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய திருமண வீடு, மணமகன் வீட்டின் பேராசையினால் சோகத்தில் மூழ்கியது.
இதனால் பாதிக்கப்பட்ட மணமகளின் குடும்பத்தினர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் முறையற்ற வகையில் திருமணத்தை நிறுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
