திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் ஒன்றிய குழு தலைவர் ப.ச சுரேஷ்குமார் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு ஒன்றிய குழு உறுப்பினர் இந்துமதி முன்னிலை வகித்தார்.
கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது நாயக்கனேரிமலை ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த ஊராட்சியில் பெரும்பாலானோர் மலைவாழ் மக்கள். எனவே மலைவாழ் மக்களுக்கு தலைவர் பதவி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை கடிதங்களை அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பியுள்ளனர்.
உயர்நீதிமன்றம் வரை வழக்கு சென்றதால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் யாரும் போட்டியிட கூடாது. தேர்தலின் போது வாக்களிக்கவும் சொல்லக்கூடாது என ஊர் முக்கிய பிரமுகர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். அதையும் மீறி தேர்தலில் வாக்களித்த 21 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து முகாமில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுத்துள்ளனர். இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி அறிக்கையை அளிக்கும்படி மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
