ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது நிலத்தில் பாதுகாப்பாகப் புதைத்து வைத்த 5 லட்ச ரூபாய் பணத்தை கரையான்கள் முழுவதுமாகச் சேதப்படுத்திய சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பச்சபத்ரா பகுதியைச் சேர்ந்த விவசாயி மங்கிலால் மேக்வால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனக்குச் சொந்தமான ஒரு நிலத்தை விற்று சுமார் 5 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு தனது விவசாய நிலத்தில் ஒரு சிறிய வீடு கட்ட திட்டமிட்டிருந்தார். ஆனால், வீட்டில் வைத்தால் பணம் திருடு போய்விடுமோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் வேறு தேவைகளுக்குச் செலவு செய்துவிடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
सुरक्षित रखने के लिए किसान मांगीलाल मेघवाल ने 5 लाख रुपए खेत में गाड़ दिए. कुछ समय बाद उसे पैसों की ज़रूरत पड़ी लेकिन तब तक वो जगह भूल गया था कि उसने पैसे कहां छुपाये. तब उसने अपने बेटों को ये बात बताई. उसके परिवार ने 10 बीघे के उस खेत की जगह जगह खुदाई की. लेकिन पैसे नहीं मिले.… pic.twitter.com/Sxu47QvLWh
— Ruby Arun रूबी अरुण (@arunruby08) August 9, 2026
இதனைத் தவிர்க்கும் பொருட்டு, மங்கிலால் 500 ரூபாய் நோட்டுகளை ஒரு பாலிதீன் பைக்குள் அடுக்கி, குடும்பத்தினருக்குத் தெரியாமல் நள்ளிரவில் தனது வயலில் அதனை ரகசியமாகப் புதைத்து வைத்துள்ளார். ஆனால், சில நாட்கள் கழித்து அந்தப் பணத் தேவைக்காக அவர் தேடியபோது, எங்கு புதைத்தோம் என்ற சரியான இடமே அவருக்கு மறந்துபோய்விட்டது. தனது நிலம் முழுவதும் பல நாட்கள் தேடியும் பணம் கிடைக்காததால், குடும்பத்தினரிடம் உண்மையை ஒப்புவித்து அவர்களுடன் சேர்ந்து தேடியும் பலனளிக்கவில்லை. இதனால் அந்தப் பணத்தின் மீதான நம்பிக்கையை அவர்கள் முற்றிலுமாகக் கைவிட்டனர்.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழைக்குப் பிறகு குடும்பத்தினர் வயலில் உழவுப் பணிகளை மேற்கொண்டபோது, அங்கு சென்ற டிராக்டர் மூலம் அந்தப் பாலிதீன் பை மேலே கிளறி வந்தது. அடுத்த நாள் மங்கிலாலின் மனைவியும் மகனும் அந்தப் பையை எடுத்துப் பார்த்தபோது, அதற்குள் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் கரையான்கள் அரித்துச் சேதப்படுத்தியிருப்பதைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர்.
இதனை மாற்றுவதற்காக வங்கி கிளைகளை அவர்கள் நாடிச் சென்றனர். ஆனால், கரன்சி நோட்டுகளின் மோசமான நிலையைக் கண்ட வங்கி அதிகாரிகள், அவற்றை மாற்ற ஜெய்ப்பூரில் உள்ள தலைமை வங்கியை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
தங்களது கடுமையான பொருளாதாரச் சூழல் மற்றும் போதிய வசதியின்மை காரணமாக ஜெய்ப்பூருக்குப் பயணம் செய்வது கடினமாக இருப்பதாகக் குடும்பத்தினர் கண்ணீர் வடிக்கின்றனர். தன் உழைப்புச் சம்பாத்தியமான 5 லட்ச ரூபாய் எப்படியாவது மீட்கப்பட வேண்டும் என்று மங்கிலால் ஏங்கி வருகிறார். பணத்தைப் பாதுகாப்பாக வைக்கிறேன் என்று நிலத்தில் புதைத்து, இறுதியில் கரையான்களிடம் பறிிகொடுத்த இந்தச் சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
