குஜராத் மாநிலத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில், பட்டப்பகலில் நடந்த ஒரு துணிகரக் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீரிஸ் பாணியில், துப்பாக்கிகளுடன் வங்கிக்குள் புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டிப் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர், வங்கியின் கருவூலத்தில் இருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் பணத்தை லாவகமாகக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கினர். தற்போது அந்தப் பகுதி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொள்ளையர்களை அடையாளம் காண வங்கி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நகரம் முழுவதும் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தப்பியோடிய கொள்ளையர்களைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.